தமிழ்நாடு மக்கள் கரோனா வைரஸ் தொற்றை கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும், வருமுன் காப்போம் என்ற அம்மாவின் திட்டம் மூலம் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என திருத்தணி அருகே நடைபெற்ற ஆய்வுக்குப்பின் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி இன்று தமிழ்நாடு - ஆந்திர எல்லையான திருத்தணியை அடுத்த பொன்பாடி பகுதியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அதிகாரிகள் பொன்பாடி சோதனைச் சாவடியில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனத்திற்கு கிருமிநாசினி தெளித்தனர்.