கரோனா பரவல் காரணமாக கோயம்பேட்டில் செயல்பட்டுவந்த காய்கறிச் சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. மொத்தமாக 200 விற்பனைக் கடைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சந்தை செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், திருமழிசை காய்கறிச் சந்தையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சந்தை முழுவதும் சேறும்சகதியுமாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
காய்கறிச் சந்தையில் மழைநீர் தேங்காமல் இருக்க ஜெட்ராட் வாகனம் மூலம் மழை நீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனைப் பார்வையிட்ட ஆட்சியர் சந்தையில் 75 விழுக்காடு சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்காதவாறு சாலைகளையும் அமைக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், ”காய்கறிச் சந்தையில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேலும் நீரை உரிஞ்சும் ஜெட்ராட் வாகனம் மூலம் விரைவாக மழைநீர் வெளியேற்றப்படுகிறது. சந்தையில் மழைநீர் தேங்காதவாறு பொதுப்பணித் துறை மூலம் ராட்சத கால்வாய் அமைக்கப்பட்டு, பங்காறு கால்வாயில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 21 விழுக்காடாக இருந்த கரோனா தொற்று பாதிப்பு, தற்போது பத்து விழுக்காடாகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது” என்றார்.