திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று புகார் வந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். இந்நிலையில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் ஆண்கள், பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விவரங்களை, அங்குள்ள பெயர்ப்பலகைகளில் குறிப்பிடாத மருத்துவமனை நிர்வாகத்தை உரிய முறையில் விவரங்களை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வின்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் தயாளன், அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்களும் உடனிருந்தனர். பின்னர், ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் நோயாளிகள் குடிநீர், படுக்கை வசதிகள், உணவு அருந்த இடம் உள்ளிட்ட தங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.