தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணியில் கல்குவாரி குட்டையில் விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு - Thiruvallur news

திருத்தணியில் உள்ள கல்குவாரி குட்டையில் விழுந்து 3 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணம் அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருத்தணியில் கல்குவாரி குட்டையில் விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
திருத்தணியில் கல்குவாரி குட்டையில் விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

By

Published : May 10, 2023, 7:38 AM IST

திருவள்ளூர்: திருத்தணி நகராட்சி சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட குப்பைக் கிடங்குகள் கல்குவாரி பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குப்பை கிடங்குக்கு எதிரில் கல்குவாரி குட்டை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த குப்பை கிடங்கில் இருந்து ‘காப்பாற்றுங்கள்’ என்ற குரல் கேட்டுள்ளது. அந்த நேரத்தில் குப்பைக் கிடங்கில் பணியில் இருந்த மணி என்ற துப்புரவு பணியாளர், உடனடியாக குப்பைக் கிடங்கிற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால், கல்குவாரி குட்டைக்கு சென்றுள்ளார்.

அப்போது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை பார்த்த மணி, அவர்களை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஆனால், அதற்குள் அதில் இருந்து குரல் எழுப்பியர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். பின்னர், இது குறித்து காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊர் பொதுமக்களுக்கு மணி தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள், கல்குவாரி குட்டையில் விழுந்த 3 பேரின் உடலை கைப்பற்றினர்.

தொடர்ந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருத்தணி காவல் துறையினர், “உயிரிழந்தவர்களில் ஒருவர் பெயர், மல்லிகா. அவருக்கு வயது 65. இவருடைய ஒரு மகள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளார். அதேபோல் இன்னொரு மகள் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், துக்க நிகழ்வு ஒன்றிற்காக தனது பேத்திகள் ஹேமலதா (16) மற்றும் கோமதி (13) ஆகியோர் பாட்டி மல்லிகா வீட்டில் இருந்துள்ளனர். இதனையடுத்து இயற்கை உபாதையை கழிப்பதற்காக கல்குவாரி குட்டைக்கு வந்த மூவரும், தவறுதலாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்தனர்.

இதனிடையே, இது குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேநேரம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோடை விடுமுறையை நீர்நிலைகளில் கழிக்கச் செல்வோர் எதிர்பாராத விதமாக அதில் உயிரிழக்கும் நிகழ்வுகள் மன வேதனையை அளிப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.

அதேபோல், போதிய விழிப்புணர்வை தீயணைப்புத் துறை, தன்னார்வலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். முன்னதாக, சம்பவம் நிகழ்ந்த கல்குவாரி குட்டைகளை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் அல்லது கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:புதிய 25 மணல் குவாரிகள் திறப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

...view details