திருவள்ளூர்: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (அக் 22) தேர்வுக்காகச் சென்ற இம்மாணவர்கள், தேர்வு எழுதிவிட்டு புத்தூர் அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பாஸ்ட் டாக் சரிவர செயல்படாததால், சட்டக் கல்லூரி மாணவர்களிடம் 160 ரூபாய் செலுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு 40 ரூபாய்தானே செலுத்தவேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுடைய பாஸ்ட் டாக்கில் பணம் உள்ளதாகவும், உங்களது தொழில்நுட்பத்தில் கோளாறு உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்கள், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏன் ஆந்திர மாநிலத்திற்குள் வருகிறீர்கள்?’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆந்திர காவல்துறையினர் முன்னிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது அடியாட்களை வைத்து இரும்பு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.