கும்மிடிப்பூண்டி வேணு உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கும்முடிபூண்டியார் என்று அழைக்கப்படும்
கும்மிடிப்பூண்டி கி.வேணு. இவர் இதே பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவர் திமுகவின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும், இரண்டு முறை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கும்மிடிப்பூண்டி கி.வேணு, அதன் பின்னர் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட ஒரு முறை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு, சிகிச்சை பலனின்றி நேற்று (அக். 20) இரவு உயிரிழந்தார். அதனையடுத்து கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கும்மிடிப்பூண்டி கி.வேணு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மிசா தடை சட்டத்தின் போது மு.க.ஸ்டாலினுடன் போராட்டம் நடத்தி அவருடன் சிறை சென்றவர் இந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "என் கருத்துகளை லைக் செய்தால் போதாது... ஷேர் செய்யுங்கள்.. உங்கள் விமர்சனம் ஆன்டி வைரஸ் அலர்ட்" - சமூகவலைதள தன்னார்வலர்கள் மாநாட்டில் முதலமச்சர் ஸ்டாலின்!