திருத்தணி:தமிழ்நாடு முழுவதும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கும் நலத்திட்ட உதவிகளை திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பின் மேடையில் பேசிய அவர், 'மகளிர் சுய உதவிக்குழுவை முதன்முதலாக 1989ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். அது,மகளிருக்கு தன்னம்பிக்கைத் தர வேண்டும் என்று தொடங்கப்பட்டது. நான்,துணை முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுவிற்குப் பல்வேறுத் திட்டங்கள் ஊக்கவிக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் மூவாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி:
மேலும் பேசிய அவர், 'தமிழ்நாடு முழுவதும் இன்று மூவாயிரம் கோடிக்கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுயதொழில் செய்வதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தை, புதிதாக புதுப்பித்து வங்கிகள் மூலம் மூவாயிரம் கோடி கடன் உதவி வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 58ஆயிரத்து 463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்துள்ளன' என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களை நல்ல வகையில் பயன்படுத்தி சிறப்புப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மிகப்பெரிய வெற்றி நிச்சயம்:
மேலும், 'மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறப் போவதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2006 -2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுயநிதி வழங்கியிருக்கிறேன்.
மகளிர் சுயஉதவிக் குழு புதிய பொலிவுடன் புதுப்பிக்க உத்தரவிட்டிருந்தேன். இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்கள் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது கலைஞர் ஆட்சியில் தான்..!
தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு முதன்முதலாக தொடங்கி, சேலம், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் அக்குழுக்கள் பரவத்தொடங்கியது. அடுத்த வந்த ஆட்சியில் முறையாக அத்திட்டத்தை செயல்படுத்தவில்லை .
1996ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் முதலில் 5127 குழுக்கள் மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டது .
அது அடுத்த ஆண்டுகளில் 7 மாவட்டங்களில் 6014 மகளிர் சுய உதவி குழுக்களானது. அடுத்த ஆண்டு 8 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 709 மகளிர் சுய உதவிக்குழுக்களாக உருவாக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது லட்சக்கணக்கான குழுக்கள் உருவாக்கப்பட்டன. 7 லட்சத்து 22 ஆயிரம் மகளிர் குழுக்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது'. என்று தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை போட்டவர் கலைஞர்:
மேலும், '1 கோடியே 6 லட்சத்து 68 மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளனர். அதற்கு விதை போட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஒரு பெண் யார் தயவையும் எதிர்பார்க்காமல், காத்திருக்காமல் அவர்கள் சொந்தக்காலில் நின்று வாழ்க்கையை உயர்த்துவதற்கு அடித்தளம் அமைப்பதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
தானே சம்பாதிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டது. இன்றைய சுழலில் அது பெண்கள் பொருளாதாரத்தில் தலை நிமிர நிற்பதற்காக அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த நிதியாண்டில் 17 ஆயிரத்து 479 சுய உதவிக் குழுக்களுக்கு 87 கோடியே 39 லட்சம் ரூபாய் சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ,நலிவுற்றவர்கள் கண்டறியப்பட்டு 5 ஆயிரத்து 838 சங்கங்கள் மூலம் 14 கோடியே 59 லட்சம் ரூபாய், இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் தயாரிக்கும் பொருட்கள் உரிய விலை கிடைக்க, அவர்கள் உற்பத்தி செய்யக்கூடியவற்றை சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.