திருவள்ளூர்: பிரதமர் மோடியின் வந்தே பாரத் ரயில் திட்டத்தின்படி ஐந்தாவது ரயில் சேவைக்காண சென்னை-மைசூர் இடையேயான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் செல்லும்போது வழக்கமாக மற்ற ரயில்களில் செல்லும் நேரத்தை விட மிக குறைந்த நேரத்தில் சென்று சேர முடியும்.
இந்த ரயிலில் 180 டிகிரி அளவுக்கு சுழலும் இருக்கை வசதி உள்ளது, 34 இன்ச் எல்சிடி டிவியும் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஒரு மில்லி மீட்டர் முதல் 650 மில்லி மீட்டர் வரை தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் எளிதில் கடந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்படவுள்ளது.