திருவள்ளூர்:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜன.14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகை அன்று, மக்கள் தங்கள் வீட்டினை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். கிராமப்புறங்களில் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியினையும் மேற்கொள்கின்றனர்.
போகி பண்டிகையை பழையன கழிதல் புதியன புகுதல் என்று குறிப்பிடுவதற்கிணங்க, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்துவர். போகி பண்டிகை என்பது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும், குப்பைகளையும் ஒழிப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாளாக கருதப்படுகின்றது.
தற்போது வட கிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், பனிப்பொழிவு சற்று அதிகரித்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்கவே, போகி பண்டிகை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் போகி பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே வீடுதோறும் சுத்தம் செய்து, வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும், பழைய துணிகளை வீட்டு முன்பு எரித்தும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் மேளங்களை அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை போகிப் பண்டிகை மூலம் கொண்டாடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் மூடு பணி காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள வேட்டவலம், சோமாசிபாடி, மேக்களூர், வேடந்தவாடி, கருமாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.
மேலும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு பெரும் சிரமத்துடன் சென்றனர். மேலும் கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஊட்டி கொடைக்கானல் போன்று பனிப்பொழிவு ரம்மியமாக காட்சி அளித்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.