100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தலில் 100சதவிகிதம் வாக்களிப்போம். ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என மகளிர் சுய உதவிக்குழுவினரின் உறுதிமொழியேற்பும், பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஒட்டியும், பயணிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஜனநாயக கடமையான வாக்களிப்பை தவறாமல் செய்யவோம். வாக்கிற்கு பணம் வாங்க மாட்டோம் எனும் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மகளிர் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேருந்துகளில் ஒட்டியும், பயணிகளுக்கு வழங்கியும் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அப்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகண்ட திரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த காணொலிகள் ஒளிபரப்பபட்டன.