திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த செம்பேடு பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவரது மகள் ஹேமாமாலினி மூன்றாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஜோசியரை அணுகியபோது, மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாகவும் உடனடியாக நாகதோஷத்தைக் கழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனை அடுத்து திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள முனுசாமி என்பவரது ஆசிரமத்திற்கு ஹேமமாலினி அவரது பெரியம்மா இந்திராணியுடன் சென்றுள்ளார்.
அப்போது, இரவு பூஜைகள் முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்ற நிலையில், அதிகாலை 4:00 மணி அளவில் சாமியார் முனுசாமியின் மனைவி தனலட்சுமி, ஹேமமாலினியின் உறவினர்களிடம், ஹேமமாலினி வாந்தி எடுத்து மயக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாணவியை வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹேமமாலினி அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாள் சிகிச்சையிலிருந்த மாணவி ஹேமாமாலினி கடந்த 16ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி இரண்டு மணிநேரத் தாமதத்திற்குப் பின்னர் சாமியார் முனுசாமி மருத்துவமனைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததாகவும் மாணவியின் உயிரிழப்புக்குச் சாமியார் முனுசாமி காரணம் எனக் குற்றச்சாட்டை வைத்து மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரம் பேசிய சாமியார்
இதையடுத்து, பென்னாலூர்பேட்டை காவல்துறையினர் ஹேமமாலினி உயிரிழந்த வழக்கை இந்திய சட்டப் பிரிவு 174, சந்தேக மரணமாகப் பதிவு செய்தனர். மேலும் மாணவியின் தந்தை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ரூ. 5 லட்சம் தருவதாகச் சாமியார் பேரம் பேசுவதாகவும் கூறி புகார் அளித்தனர்.