வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை அடுத்த பாலவேடு பகுதியில் சாஸ்திரி நகரில் வசித்து வந்த 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடியை அடுத்த மோரை ஊராட்சியில் ஜெ.ஜெ நகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு மின் விளக்குகள், குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு, வசிக்கும் இருப்பிடம் பகுதியிலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாஸ்டர் அருண் கௌதம் தலைமையில், மாநில அரசியல் பொதுச் செயலாளர் நீல வானத்து நிலவன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் பூண்டி இளவரசு, ஒண்டிக்குப்பம் வழக்கறிஞர் ஜார்ஜ் முல்லர், வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் தங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் எனவும், தங்களுக்கு நிரந்தர இருப்பிடமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: "நீட்டால் நிகழ்ந்தது தற்கொலை அல்ல.. ஒன்றிய அரசால் செய்யப்பட்ட கொலை" - உதயநிதி ஸ்டாலின்!