திருவள்ளூர்:முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி இன்று (ஜூலை 6) அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கரோனா தொற்று காரணமாக 60 நாள்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திருக்கோயில்கள் சில நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில், ஆனி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதலே மலைக்கோயிலில் குவிந்தனர்.
காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்:
மலைக்கோயில் தேர் வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இலவச தரிசனம், 150 ரூபாய் சிறப்பு தரிசன ஆகிய வழிகளில் ஏராளமான பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து சுமார் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும், திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்சோதி கோயில் அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் திறப்பு: ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர்