திருவள்ளூர்:முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத்திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
வரும் வியாழக்கிழமை தொடங்கும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறயிருக்கிறது. இம்மாதம் 23ஆம் தேதி ஆடிக்கிருத்திகை அன்று மாலை சரவணப் பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது.
விழாவில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி மலை கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் தற்காலிகப்பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்து வசதிகளும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஜூலை19) காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திருத்தணியில் சரவணப்பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, திருப்படிகள் வழியாக மலைக்கோயிலுக்குச் சென்று மருத்துவ மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.