திருவள்ளூர்:கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 முதல் 10 டன் வரையிலான குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அவற்றை கூவம் ஆற்றில் ஊராட்சி சார்பில் கொட்டி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி குப்பைகளை கொட்டுவதற்குத் தடை செய்யப்பட்டது.
இதனை அடுத்து வெங்கத்தூர் கன்னிமா நகர் குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் வெங்கத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுனிதா பாலயோகிக்கு, மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்திற்கு காசோலையில் கையெழுத்திடும் பவரை நிறுத்தி வைத்து, நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடிதத்தை பெறாமல் ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து குப்பை கொட்டுவது தொடர்பாக சார் ஆட்சியர் மகாபாரதி, பயிற்சி ஆட்சியர் கேத்தரின் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் ஆகியோர் தலைமையில் வெங்கத்தூர் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உடன் அமைதிப்பேச்சு வார்த்தை இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.