திருவள்ளூர்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் மாணவர்கள் தற்கொலை முடிவுகளைக் கையிலெடுப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனிதா (17), தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் மாணவி அனிதா, 600க்கு 435 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், நன்றாக படித்து வந்த நிலையில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததாகவும், இதனால் அனிதா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அனிதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர், அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் ஹரியும் தற்கொலை செய்து கொண்டார்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஹரி, தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் தேர்வு முடிவு வெளியாகும் அன்றைய நாள் காலையிலேயே தற்கொலை செய்து கொண்டார். 2022 - 2023 கல்வியாண்டில் மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.