திருநெல்வேலி:பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாராஜன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் வெற்றி விஷ்வா, சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி மரைன் இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினம் பகுதியில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சி பணியில் சேர்ந்துள்ளார்.
அங்கு கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு விஷ்வா வீடியோ கால் மூலம் தனது குடும்பத்தினர் அனைவரிடமும் பேசியுள்ளார். அப்போது காலையில் பணிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து பேசிய அதிகாரிகள் உங்களது மகனை காணவில்லை என்ற தகவலை விஷ்வா குடும்பத்திடம் தெரிவித்துள்ளனர். கப்பலில் பணிக்கு சென்ற மகன் எப்படி மாயமானார் என்று கேட்டதற்கு அவர்கள் முறையான பதில் தரவில்லை என கூறப்படுகிறது.
பணிக்கு செல்லும் போது செல்போனையும் எடுத்து செல்லாமல் ரூமில் வைத்து விட்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றி விஷ்வாவின் குடும்பத்தினர், இது குறித்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் முறையிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் நயினார் நாகேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.