தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் தொடரும் கொலைச் சம்பவங்கள்.. மீண்டும் தலை தூக்குகிறதா அரிவாள் கலாச்சாரம் - பொதுமக்கள் அச்சம்! - நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்

Youth brutally murdered in Tirunelveli: நெல்லையில் முன்னீர்பள்ளம் பகுதியில் இளைஞர் ஒருவஎ சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் வாலிபன் கொடுரமாக வெட்டிக் கொலை
நெல்லையில் வாலிபன் கொடுரமாக வெட்டிக் கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 2:14 PM IST

திருநெல்வேலி: மேலப்பாளையம் அடுத்த கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பேச்சுகுட்டி என்பவரது மகன் வீரபுத்திரன் (28). இவர் லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.7) இரவு தனது பணிகளை முடித்துவிட்டு, முன்னீர்பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீரபுத்திரனை சரமாரியாக வெட்டி தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் தலையிலும், முகத்திலும் பலத்த காயமடைந்த வீரபுத்திரன் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வீரபுத்திரனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், இக்கொலைச் சம்பவம் முன்விரோதம் காரணமானதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாதுகாப்பு பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:நெல்லையில் பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டி கொலை.. நீதிமன்றம் அருகே நடந்த கொடூரம்!

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் இடையேயான பிரதான சாலையில், நடைபெற்ற இக்கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு நாட்களாக அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதுவும் குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடிய இடங்கள், அரசு அலுவலகங்கள் அருகில், பிரதான சாலைகளில் பட்டப்பகலில் கொலை சம்பவங்கள் நடைபெறுவது மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுப்பியுள்ளது. எனவே, காவல் துறையினர் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் காதலை கைவிட மறுத்த இளம்பெண் ஆணவக் கொலை.. தம்பி செய்த வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details