திருநெல்வேலி: நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் உலக அளவில் உற்றுநோக்கும் முக்கிய தேர்தலாக அமைய உள்ளது.
பாஜக vs இந்தியா கூட்டணி:தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அரசியல் நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதேசமயம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என சர்ச்சைக்குரிய பல சட்ட திருத்தங்கள் போன்ற காரணங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் 'இந்தியா' கூட்டணி எப்படியாவது இந்தமுறை பாஜகவை வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, புதுச்சேரி மாநிலத்தை சேர்த்து 40 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 4 இடங்களை கைப்பற்றிய பாஜக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாஜகவிற்கு வெற்றி கிட்டுமா?:குறிப்பாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை அக்கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்திப்பதாக பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர். அதேசமயம், இந்த வளர்ச்சி தேர்தலில் ஓட்டுக்களாக பிரதிபலிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், ஆளுங்கட்சியான திமுக கடந்தமுறை போல, இந்த முறையும் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
அதன்படி தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் வழக்கம்போல், சமுதாய ரீதியாக தொகுதிகளைப் பிரித்து அதற்கு ஏற்ப வேட்பாளர்களை நிறுத்த கட்சி தலைமைகளுடன் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர், தங்களின் வாரிசுகளை களமிறக்கவும் திட்டம் தீட்டி வருவதனால், மறைமுகமாக தேர்தல் பரபரப்பு நிலவிவருகிறது.
திருநெல்வேலி தொகுதியில் வெற்றியை தீர்மானிப்பது எது?: தென்கோடியில் உள்ள திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. மொத்தம் 13,68,718 வாக்காளர்களைக் கொண்ட திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் என 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் என நிரம்பிய திருநெல்வேலி தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் சமுதாய ரீதியாகவே வெற்றியை தீர்மானித்துள்ளது எனலாம்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம் இதுதானா?:குறிப்பாக, இங்கு 'நாடார்' சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகளவு உள்ளனர். எனவே, இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் நாடார் வேட்பாளர்களையே களமிறக்கி வெற்றி பெற்றுள்ளனர். அந்தவகையில், கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானதிரவியம் எம்பி, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வழக்கம்போல், இந்த முறையும் சமுதாய ரீதியாகவே வேட்பாளர்கள் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமையின் உத்தரவுக்கு காத்திருக்கும் முக்கியப்புள்ளி: அதேசமயம், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பி ஆக வேண்டும் என்ற பெரும் கனவோடு இருப்பதாக கூறப்படுகிறது. பல பேட்டிகளின்போது, அவரும் இதனை வெளிப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்புகூட, செய்தியாளர்கள் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? என அவரிடம் கேட்டதற்கு, 'கட்சி தலைமை உத்தரவிட்டால் நிச்சயம் போட்டியிடுவேன்; அந்த விருப்பம் எனக்கு இருக்கிறது' என வெளிப்படையாக கூறியிருந்தார்.
தேர்தலில் மக்கள் செல்வாக்கு வெற்றியை தருமா?:நயினார் நாகேந்திரனை பொருத்தவரை ஏற்கனவே, அதிமுகவில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நடுவே பாஜகவில் இணைந்தார். பாஜகவில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்க தொடங்கினார். குறிப்பாக, எல்.முருகன் மத்திய அமைச்சராக்கப்பட்ட பிறகு, பாஜகவின் மாநில தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கட்சி மேலிடத்தில் துண்டுப் போடும் தலைவர்கள்?:அதேநேரம், அவருக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்கவில்லை. பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் தெரிகிறது. இருப்பினும், பெரிய அளவில் பதவி கிடைக்காததால், கடந்த 2021-ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் நயினார் நாகேந்திரன் தனது திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டதோடு அங்கு 'தாமரை' சின்னத்தை வெற்றிபெற செய்து அனைவரையும் திருப்பிப் பார்க்கவைத்தார்.
திருநெல்வேலி மண்ணின் 'பண்ணையார்' என செல்லமாக அழைக்கும் அளவிற்கு, நயினார் நாகேந்திரனுக்கு தனிப்பட்ட முறையில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. இந்த அளவிற்கு மக்களின் செல்வாக்கு பெற்ற இவர், எம்எல்ஏ தேர்தலைப் போல, எம்பி தேர்தலிலும் தனது செல்வாக்கின் மூலம் எளிதில் வெற்றி பெறலாம் என்பது நயினார் நாகேந்திரன் கணக்காக உள்ளது.
பாஜகவின் பாய்ச்சல் எப்படியிருக்கும்?:அதேசமயம், அவர் 'தேவர்' சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகள் குறைவாக இருப்பதால், அவரது வெற்றி பாதிக்கும் என்பதால் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும், தனக்கு இல்லாவிட்டாலும் தனது மகன் நயினார் பாலாஜிக்காவது எம்பி சீட்டு வாங்க வேண்டும் என்பதில் நயினார் நாகேந்திரன் முனைப்போடு இருப்பதாக தெரிகிறது.
மேடைகளில் புகழ்ந்து பேசுவது கூட்டணிக்காக தானா?:இது போன்ற சூழ்நிலையில் சமீபத்தில் திருநெல்வேலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான ஆர்.சரத்குமார், 'உலக அளவில் இந்தியாவின் பார்வையை உயர்த்தியது, மோடிதான்' என மத்திய அரசை திடீரென புகழ்ந்து பேசியிருந்தார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என கூறப்படுகிறது.
கிழக்கிலிருந்து வாய்ப்புக்காக எழும் குரல்:மேலும், சரத்குமார் 'நாடார்' சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருநெல்வேலி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரே அந்த நிகழ்ச்சியில் மறைமுகமாக கூறியிருந்தார். அதேபோல் திமுகவை பொறுத்தவரை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத்தலைவரான கிரஹாம்பெல், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இப்போதே அவர் திமுகவின் முக்கியப் புள்ளிகளை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூத்தத் தலைவர் போடும் திட்டம்.. பலன் தருமா?:மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தனது மகன் அலெக்ஸ் அப்பாவுவை எப்படியாவது திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட செய்து எம்பி ஆக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர். அவரும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், திமுக ஆளுங்கட்சி என்பதாலும் எளிதில் திருநெல்வேலி தொகுதியை கைப்பற்றி விடலாம் என்று எண்ணியுள்ளார். அலெக்ஸ் அப்பாவு தற்போது, திமுகவில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக உள்ளார்.
எதிர் அணியை களைக்கும் முயற்சி?:மேலும் தனது திட்டப்படி, மகன் அலெக்ஸ் அப்பாவுக்கு கட்சி தலைமை சீட் வழங்கினால், அவரை வெற்றிபெற செய்வதற்கு ஏதுவாக எதிர் அணியில் பலமான வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுக்க வேண்டும் எண்ணுவதாக பேசப்படுகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு இப்போதே, மறைமுகமாக சில திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக vs திமுக; வேட்பாளர்கள் யாராக இருக்கும்?: குறிப்பாக, நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி சமீபத்தில்தான் அரசியலில் கால் ஊன்றினார். அவருக்கு உடனடியாக மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் நில மோசடி வழக்கு ஒன்றில் நயினார் பாலாஜி சமீபத்தில் சிக்கினார். சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நிலத்தை பதிவு செய்திருப்பதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த புகாருக்கு பின்னணியில் சபாநாயகர் அப்பாவு செயல்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், இதுவும் ஒரு வகையான தேர்தல் ரீதியான மோதல்தான் என அரசியல் விமர்சகர்கள் பேசினர்.
எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தலைவர்கள்:அதேபோல் அதிமுகவை பொருத்தவரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பணகுடியைச் சேர்ந்த ஐ.எஸ்.இன்பதுரை, அதிமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. கட்சி தலைமையும் அவருக்கு எளிதில் பச்சைக்கொடி காட்டும் என தெரியவருகிறது. எனவே, அல்வாவுக்கு புகழ் பெற்ற திருநெல்வேலி தொகுதியை அடைய சரத்குமாரில் தொடங்கி சபாநாயகர் வரை பல பிரபலங்கள் திட்டம் தீட்டி வருவது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்.. பொதுக்குழு கூட்டத்தில் 18 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!