திருநெல்வேலி:தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், சில நேரங்களில் மனிதர்களைத் தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களால் அச்சம் அடையும் பொதுமக்கள், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் நாய்களின் தொல்லை நாள்தோறும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சியைக் கண்டித்து ஒட்டப்பட்ட நூதன போஸ்டர் மாநகராட்சி சார்பில் அவ்வப்போது நாய் பிடிக்கும் வண்டி மூலம், பெயரளவுக்குத் தெரு நாய்களைப் பிடித்துச் செல்வதாகவும், மற்ற நேரங்களில் அவற்றின் அட்டூழியத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், நாய்க் கடியால் பலர் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகரின் 36வது வார்டில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்தாத மாநகராட்சியைக் கண்டிக்கும் வகையில், சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் நகைச்சுவையாக போஸ்டர் ஒன்றை அப்பகுதியில் ஒட்டியுள்ளது, அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதில், "36வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு குழுவின் உறுப்பினர்கள்" என்று தலைப்பிட்டு, அதன் கீழ் வரிசையாக நாய்களின் புகைப்படங்களோடு, அவற்றின் பெயர் (புனைபெயர்), வயது, குணம் மற்றும் அந்த நாய்களால் கடிப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கற்பனையாக குறிப்பிட்டு இருந்தது.
குறிப்பாக அந்த போஸ்டரில், அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பெயர்களான புண்ணிய மூர்த்தி, களத்தூர் தட்சிணா மூர்த்தி, வழுவக்குடி சுந்தரமூர்த்தி, மேலக்குடி ராமமூர்த்தி என்று நாய்களுக்கு கலக்கலான பெயர்களைச் சூட்டியுள்ளார். மேலும் அதன் குணங்களாக சண்டை இழுத்தல், கடித்து வைத்தல், ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டுதல், சங்கத் தலைவனாக பாவித்தல், பதுங்கி இருந்து விரட்டுதல் என குறிப்பிட்டு இருந்தது.
இதையும் படிங்க:சென்னை ரிப்பன் மாளிகைக்கு உயர்தர பசுமைக் கட்டிட விருது!