திருநெல்வேலி:மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா அபிஷேக ஆராதனை மற்றும் தீர்த்தவாரியுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலிமாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற உச்சிஷ்ட விநாயகர் ஆலயம் விநாயகருக்கென அமைந்துள்ளது. ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட கோயிலும் இது தான். ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் ஸ்ரீநீலவாணி அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.
பிரகாரத்தில் ஸ்வர்ண ஹரித்ரா குஷி விஜய அர்க குரு சந்தானலஷ்மி ஹேரம்ப சக்தி சங்கடஹர துர்கா ருணஹரண ஸ்ரீவல்லபை சித்தி வீர ஸர்வசக்தி கணபதி என 16 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். மேலும் நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதர் ஈசான்யத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் என தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 தினங்கள் சிறப்பாக நடைபெறும்.
அதனையொட்டி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாராதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் தீபாராதனைகளும் நடைபெற்றன.