திருநெல்வேலி: "பிரசவத்திற்காக பொறந்த வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க மாதிரி வருஷா வருஷம் எங்கள நம்பி இங்க குஞ்சு பொரிக்க வருதுங்க. உங்களுக்கு தான் அது வெளிநாட்டுப் பறவைங்க. எங்களுக்கு எப்பவும் அதுங்க எல்லாம் எங்க வீட்டுப் பிள்ளைங்க தான்" கூந்தன்குளம் என்னும் கிராம மக்களின் ஏகோபித்த குரல் இது!
நெல்லை மாவட்டத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கூந்தன்குளம் கிராமம். ஆண்டு தோறும் இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப்பறவைகள் வலசையாக வந்து செல்கின்றன. அவைகளை தங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் போல பாவித்து வருகின்றனர் கிராமவாசிகள்.
இயற்கையான சரணாலயம்
கூந்தன்குளம், காடன்குளம் என இயற்கையாக அமைந்த நீர்பரப்பில், 129.33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கூந்தன் சரணாலயம். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு கூந்தன்குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பராமரித்து வருகிறது.
தங்களின் சொந்த தேசங்களில் வாழ வழியின்றி, தூர தேசத்திற்கு வலசை வரும் பறவைகள், இங்குள்ள குளங்கள், கிராமங்களில் இருக்கும் மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. கூந்தன்குளத்திற்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, சைபீரியா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.
தை அமாவாசைக்கு ஊருக்கு வரும் பறவைங்க, கூடுகட்டி குஞ்சு பொரிச்சு, குஞ்சுங்க கொஞ்சம் வளர்ந்ததும், ஆடி அமாவாசைக்கு வெளிக்கெளம்பிருங்க. அதேமாதிரி நல்ல நாள்லதான் பறவைங்க கூடுகட்ட ஆரம்பிக்கும். அதுங்க வெறும் பறவைங்க இல்லை.ஞானபட்சி என பறவைகள் குறித்த தனது அனுபவத்தை விவரிக்கிறார் கிராமத்து பெரியவர் சுடலைமுத்து.
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இங்கு பறவைகள் சீசன். இந்த காலநேரத்தில், பின்டைல், கிரிசன் காரிகனி, பிளமிங்கோ போன்ற வெளிநாட்டு பறைகளும் வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிகான் நீர்காகம், நாமக்கோழி, நீர் வாத்து, கூழைக்கடா, சாம்பல் நாரை போன்ற உள்நாட்டுப்பறவைகளும் வலசை வருகின்றன.