தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபரீதமாக மாறியதா வெள்ளநீர் கால்வாய்? - தத்தளித்த கிராமம்! சபாநாயகரின் விளக்கம் - Tirunelveli Flood

Tirunelveli Flood: தென் மாவட்டங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், இயற்கைப் பேரிடர் தங்கள் நிலைக்கு காரணமில்லை எனக் கூறும் கொழுமடை கிராமமக்களின் மனக் குமுறல்களும், உண்மை நிலவரமும் அடங்கிய செய்தித் தொகுப்பைக் காணலாம்.

Villagers of Kolumadai blame the Speaker for the flood Affected Areas
வெள்ள பாதிப்பிற்கு சபாநாயகரைக் குறைகூறும் கொழுமடை கிராம மக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 1:20 PM IST

Updated : Dec 23, 2023, 9:03 AM IST

விபரீதமாக மாறியதா வெள்ளநீர் கால்வாய்? - தத்தளித்த கிராமம்! சபாநாயகரின் விளக்கம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது. இங்கு கொழுமடை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யத் தொடங்கியது.

மறுநாள் வரை மழை நீடித்த நிலையில், அன்று கொழுமடை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும் மழைக்கு நடுவே வழக்கம்போல் கடந்த 16ஆம் தேதி இரவு கொழுமடை கிராம மக்கள் தங்கள் அன்றாட பணிகளை முடித்துவிட்டு, இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 11 மணியளவில் திடீரென ஊருக்குள் கடும் வெள்ளம் வரத் தொடங்கியுள்ளது.

இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள், திடீரென தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டு விழித்துள்ளனர். அப்போது, ஊரே வெள்ளக்காடாக மாறி காட்சியளித்துள்ளது. ஒருபுறம் இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. மறுபுறம் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், பெண்களை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழல் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த இக்கட்டான நிலைக்கு என்ன காரணம் என அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போதுதான், எங்கள் ஊருக்கு தென்புறம் அமைந்துள்ள வெள்ள நீர் கால்வாயில் ஏற்பட்ட பெரும் உடைப்பே, கிராமத்திற்குள் வெள்ளம் சூழ்ந்ததற்கான காரணம் என தெரியவந்தது. எனவே, மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதால், அவசர அவசரமாக எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையாவிடம் தகவல் தெரிவித்தோம்.

இதையடுத்து எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, கொழுமடை கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் திறப்பதை உடனே நிறுத்த வேண்டி கோரிக்கை வைத்தார். ஆனால், மறுநாள் பகல் 12 மணிக்கே வெள்ளநீர் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த முடிந்தது. அதன் பிறகு தான் எங்கள் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறையத் தொடங்கியது. 14 மணி நேரம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தால், எங்கள் கிராமத்தைச் சுற்றி இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் பெரும் சேதம் அடைந்தன. மேலும், நாங்கள் பிசான சாகுபடியில் நெற்பயிர்களைப் பயிரிட்டு வந்தோம்.

இந்த பெரும் வெள்ளம், நெற்பயிர்கள் அனைத்தையும் நாசமாக்கிவிட்டது. குறிப்பாக விளைநிலங்கள் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஆறு போல் மாறியுள்ளது. இந்த நிலையில், எங்கள் கிராமத்தின் உட்புற பகுதியில் இருந்து வெளியே செல்வதற்காக, நாங்கள் அந்த வழியாக உள்ள குறுகிய பாதையைப் பயன்படுத்தி வந்தோம்.

ஆனால் அன்று இரவு ஏற்பட்ட வெள்ளத்தால், அந்த பாதை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஒரு பக்கம் பாதை பறிபோனது என்றாலும், அந்தப் பாதை அடித்து செல்லாவிட்டால் கடும் ஆக்ரோஷத்தோடு வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து, வீடுகளையும் மூழ்கடித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக பாதை உடைந்ததால், தண்ணீர் ஊருக்குள் வராமல் வயல் பகுதியை நோக்கிச் சென்றுள்ளது.

மேலும், இந்த திடீர் வெள்ளத்தால் நாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளைத் தண்ணீர் இழுத்துச் சென்றது. தற்போது மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, நாங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரத் தொடங்கி உள்ளோம். ஆனாலும் தற்போது வரை இங்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

எங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகளை வெள்ளம் அடித்து சென்றதால், பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளோம். அரசின் பெரும் அலட்சியப் போக்கால் தான் இங்கு பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் கூறினர்.

வெள்ளத்தின் பின்னணி என்ன? :தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி, மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகி, 120 கி.மீ நீளத்திற்கு பயணித்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலில் கலக்கிறது. சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு முதலான 12 நதிகள் தாமிரபரணியின் உப நதிகளாகும். இதில் மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட ஒன்பது நீர்த்தேக்கங்களும், எட்டு அணைக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளன.

தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் சுமார் 13 ஆயிரத்து 380 மில்லியன் கன அடி நீர் பயன்படுத்த முடியாமல் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. எனவே இதில் 25 சதவீதத்தை, அதாவது 3 ஆயிரத்து 200 மில்லியன் கன அடி நீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு திறப்பதற்காக, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு சுமார் 369 கோடி திட்ட மதிப்பீட்டில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் சுமார் 11 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021-ல் நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு திட்ட பணிகள் தொடங்கின. தற்போது சுமார் 980 கோடியில் திட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தூரத்திற்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் திட்டம் முழுமையாக முடிவடையவில்லை.

கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாளன்குழி என்ற இடத்தில் வெள்ள நீர் கால்வாய் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தின் வறட்சி பகுதிகளான திசையன்விளை, ராதாபுரம், கூடங்குளம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். எனவே நீர் மேலாண்மை என்ற வகையில் இத்திட்டம் பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்னரே தண்ணீரை திறந்து விட்டது, தற்போதைய கட்டுக்கடங்கா வெள்ளத்தில் ஆபத்தாக முடிந்து விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கொழுமடை கிராமமக்கள் கூறுகையில், “ அதன்படி கடந்த 16ஆம் தேதி பிற்பகல் சபாநாயகர் அப்பாவு மற்றும் அதிகாரிகள் வெள்ள நீர்க்கால்வாயில் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்து விட்டனர். திட்டம் முழுமை பெறாத நிலையில், அவசர கதியில் தண்ணீர் திறந்து விட்டதாலும், மூவாயிரம் கன அடி மட்டுமே கொள்ளளவு கொண்ட கால்வாயில், ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாலும், எங்கள் கிராமத்தின் (கொழுமடை) தென்பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் பெரும் உடைப்பு ஏற்பட்டது.

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் கட்டுக்கடங்காத வெள்ளம் கொழுமடை கிராமத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது. கிராமமே மூழ்கி அழியும் அளவுக்கு பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், தண்ணீரை திறந்த பின்னர், அதன் பாதிப்புகள் குறித்து ஆராய வேண்டாமா என கொந்தளிக்கின்றனர்.

மேலும், இந்த கடும் உடைப்பைத் தொடர்ந்து கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டாலும் கூட, கால்வாய் உடைப்பு தற்போது வரை சரி செய்யப்படவில்லை என்பது மக்களின் வேதனையாக உள்ளது. தற்போது அங்கு காட்டாற்று வெள்ளம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், இன்னமும் கொழுமடை கிராமத்தை நோக்கி தண்ணீர் சென்று கொண்டு தான் இருக்கிறது.

மழை ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆகியும், கொழுமடை கிராமத்தை இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளதாக வேதனை குரல் இன்னும் எழுந்த வண்ணமே உள்ளது. இது குறித்து சபாநாயகர் அப்பாவுவை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்ட போது, “பொதுவாக நெல்லை மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் கால்வாயில் அன்று சோதனை அடிப்படையில் மிகவும் குறைவான அளவு தண்ணீரைத் தான் திறந்தோம். எங்களுக்கு மொத்தமே 300 கன அடி மட்டும் தான் தண்ணீர் தேவைப்பட்டது.

அந்த அளவு தண்ணீரை தான் நாங்கள் திறந்தோம். ஏற்கனவே எங்கள் பகுதியில் உள்ள நம்பியாறு. கொடுமுடி ஆறு போன்ற அணைகள் நிரம்பி விட்டதால். அதற்கு மேல் தண்ணீர் தேவை இல்லை. அரசியலுக்காக வெள்ளநீர் கால்வாயில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Last Updated : Dec 23, 2023, 9:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details