திருநெல்வேலி:நாட்டின் 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய மக்கள் தொடர்பகம், சென்னை மண்டல அலுவலகம் சார்பில் இந்திய சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத ஆளுமைகளை எடுத்துக் கூறும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அருண்ஸ் மஹாலில் 10 நாள்கள் கண்காட்சி இன்று (ஆக.20) தொடங்கப்பட்டது.
இந்த கண்காட்சியை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை அறியப்படாத ஆளுமைகளின் வரலாற்றை மக்களுக்கு எடுத்து கூறும் வகையிலான 130 பேரின் புகைப்படங்கள் இடம்பெறுள்ளன.
குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர்களான ஒண்டிவீரன், வஉசி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளது. இதைத்தெடர்ந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 14ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஸ்வராஜ் என்ற தொடர் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அதன் பிராந்திய மொழி ஓலிபரப்பையும் அமைச்சர் முருகன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகப் பெரிய மாவட்டமாக இருந்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட அதிகமானோர் இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இது மிகப் பெருமையுடையது. 2047ஆம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேற வேண்டும்.
அனைத்தும் அனைவருக்கும் என்ற திட்டம் 100ஆவது சுதந்திர தினத்தில் நிறைவேற வேண்டும். 75ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 சுதந்திர போராட்ட வீரர்களுடைய தொடர் தூர்தர்சனில் 9 பிராந்திய மொழிகளில் 75 வாரம் தொடர்ச்சியா ஒளிபரப்பபட உள்ளது. 75 சுதந்திர போராட்ட வீரர்களில் 3 தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.