திருநெல்வேலி:பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்த மறுநாளே நாடாளுமன்றத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ( ஏப்.15 ) நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் அறிவித்தார். வழக்கம்போல் ரயில் மறியல் என்பதால் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் அனுமதியை மீறி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால், காலை முதல் ரயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது. திட்டமிட்டபடி 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அங்கு திரண்டனர் கொண்டுவரப்பட்டன. எனவே ரயில் நிலையத்திற்குள் அவர்களை செல்ல விடாமல் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், காவல் துறையினரே பாதுகாப்பாக காங்கிரஸ் கட்சியினரை ரயில் நிலையத்திற்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட வைத்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது அனுமதி இல்லாத போராட்டம் என தெரிந்தும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது காவல் துறையினர் அவர்களை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காவல் துறையினரும் கூட்டத்தோடு கூட்டமாக சென்றனர். முதலில் ரயில் நிலையத்தின் முதலாவதாக நடைமேடையில் நின்ற ரயிலை மறிக்க முற்பட்டனர்.