திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக் கைதிகளின் பல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளருமான அமுதா உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில், தனது முதல் நாள் விசாரணையைத் தொடங்கினார்.
ஆனால் அன்று, பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேநேரம் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்பு, 9 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இவர்களில் மூன்று பேர் தவிர, மீதம் உள்ள ஆறு பேர் போலீஸ் அதிகாரி தங்கள் பல்லை பிடுங்கியதாக விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில், உயர் மட்ட அதிகாரியிடம் யாரும் விசாரணைக்கு ஆஜராகதால் குழப்பம் ஏற்பட்டது.
எனவே, விசாரணை அதிகாரி அமுதா, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே உயர்மட்ட விசாரணையை புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்ட சிலரின் வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்தார். இந்த நிலையில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா, மீண்டும் வருகிற 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், திருநெல்வேலியில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா ஐஏஎஸ், கடந்த 10.04.2023 அன்று, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது விசாரணை அலுவல்களை மேற்கொண்டார்.