தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனங்கள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் விதிகளின்படி பள்ளி வாகனங்களில், வேகக்கட்டுப்பாடு கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி என அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 153 தனியார் பள்ளி பேருந்துகள் தரக்கட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
விதியை மீறினால் பள்ளி வாகனங்கள் இயக்க அனுமதி இல்லை - நெல்லை ஆட்சியர்..!
நெல்லை: தனியார் பள்ளி வாகனங்களின் தரக்கட்டுப்பாடு குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, பள்ளி வாகன ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது,
'அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்ட பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வாகனங்களுக்கான இந்த சோதனை ஒருவாரத்திற்கு நடைபெறும்' என்று தெரிவித்தார்.