திருநெல்வேலி: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் குளித்துவிட்டு வந்த இரண்டு இளைஞர்களிடம், போதை கும்பல் ஒன்று தகாத முறையில் நடந்து கொண்டு சாதியைக் கேட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை தொடர்பாகவும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையின் கவனத்திற்குச் சென்றவுடன், ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தவறு யார் செய்தாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள், தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் இது போன்ற சம்பவங்களைப் பெரிதுபடுத்தாமல், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்போடு இந்த சமூகம் எந்தவித மோதலும் இல்லாமல் வாழ்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்.