திருநெல்வேலி: பாளையங்கோட்டை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசிற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜான்பாண்டியன், “மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்த்தவ மதத்திலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் அரசானை அறிவிப்பு கரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 80 விழுக்காடு அதிகமான தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிமுக, பாஜகவிற்கு கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஜான்பாண்டியன் கேட்ட தொகுதி தரவில்லை
நான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தென்மாவட்டத்தில் தொகுதி கேட்டும் கொடுக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடு வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட வைத்தார்கள். நான் அதிமுகவால் தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன்.
தேவேந்திரகுல வேளாளர் என அரசானை கொடுத்த காரணத்திற்காக நன்றியுடன் இருந்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறாமல் கொடுத்த தொகுதியில் போட்டியிட்டேன். அதிமுக, பாஜக வெற்றி பெற தேவேந்திரகுல வேளாளர் மக்களும் காரணம். அதே போன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றிபெற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறவும் தேவேந்திரகுல வேளாளர் மக்களே காரணம்” எனத் தெரிவித்தார்.
பிரதமருடன் பேசுவேன்
தொடர்ந்து பேசிய அவர், “தென் மாவட்டங்களில் திட்டமிட்டு என்னை தேர்தல் பரப்புரை செய்ய விடவில்லை. பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரை செய்திருந்தால் இன்னும் அதிகமான தொகுதிகளில் தென்மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். தற்போதைய நிலையில் அதிமுகவுடன் உறவு மட்டுமே உள்ளது, கூட்டணி இல்லை. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரவுள்ளோம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லை, அதிமுகவின் இரண்டு தலைமையால் அக்கட்சி அழிவை நோக்கி செல்கிறது. கடந்த தேர்தலில் பரப்புரைக்குச் செல்லக்கூட எனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்யவில்லை.
வரும் 21ஆம் தேதி டெல்லியில் பிரதமர், ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். அப்போது, மேகதாது அணை விவகாரம் குறித்தும் பிரதமருடன் ஆலோசிப்பேன்” என்றார்.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: டெல்லி சென்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பேட்டி