இந்த காலத்தில் பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை. ஆண்கள் பார்க்கும் கடினமான வேலையை தங்களாலும் பார்க்க முடியும் என்பதை பல பெண்கள் நிரூபித்துக்காட்டி வருகின்றனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் மாறி வானில் பறக்கும் அளவிற்கு பெண்கள் பல சாதனைகளை புரிந்துவருகின்றனர். இருக்கும் எண்ணற்ற துறைகள் அனைத்திலும் பெண்கள் அவர்களது சாதனைகளை செய்கின்றனர்.
ஒருகாலத்தில் வீட்டு படியை தாண்டாத பெண்கள் தற்போது தனி ஒரு விமானத்தை இயக்கி வெளிநாட்டிற்கு பறக்கும் நிலையை எட்டியுள்ளனர். மேலும் சைக்கிள், பைக்கில் ஆரம்பித்து பேருந்து, ரயில், விமானம் ஓட்டும் வகையிலும், சுயதொழில் செய்து தனி ஒரு மனிதராக குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டும் 8 பெண்கள்
அந்த வகையில் பெண்கள் ஆட்டோ தொழிலில் அதிகளவில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தியாகராஜ நகரை சேர்ந்த தேவி, பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகந்தி, ஜெயஸ்ரீ, காந்திமதி, தருவையைச் சேர்ந்த லதா, களக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, பழைய பேட்டையைச் சேர்ந்த சந்திரகுமாரி, நரசிங்கநல்லூரை சேர்ந்த சுந்தரி ஆகிய எட்டு பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
எட்டு பேரில் காந்திமதிதான் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர். இவர்களில் தேவி மற்றும் காந்திமதி ஆகிய இருவரின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதுபோன்று பல்வேறு குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக எட்டு பெண்களும் சுயதொழிலாக, இந்த ஆட்டோ ஓட்டும் தொழிலை தேர்வு செய்துள்ளனர்.
சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்... பாரதி கண்ட புதுமை பெண்கள்
இவர்கள் 8 பேரும் இணைந்து பாரதி கண்ட புதுமை பெண்கள் ஆட்டோ சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர். பாரதியின் வார்த்தைக்கு உயிரூட்டும் வகையில் செயல்பட்டுவரும் இவர்கள், தங்களது ஆட்டோவிலும் பாரதியின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுவது மட்டுமில்லாமல் பஞ்சர் ஒட்டுவது ஆட்டோ பழுது பார்ப்பது என அனைத்து வேலைகளையும் தெரிந்துவைத்துள்ளனர். இந்நிலையில் அரசின் வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 8 பெண்கள் மட்டுமே ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதாவது பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு அரசு சார்பில் தாட்கோ கடன் திட்டம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டாலும், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும்
குறிப்பாக தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பெண் பயிற்சியாளர்கள் இல்லாததால் ஆட்டோ தொழிலில் ஆர்வம் இருந்தும்கூட, பல பெண்கள் பயிற்சி பெறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதேபோல் தனியார் பயிற்சி பள்ளி மூலம் பயிற்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 15 ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் திருநெல்வேலியில் மேலும் பல பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டினாலும் பயிற்சி பெறுவது மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் ஏற்படும் சிக்கல் அவர்களுக்கு தடையாக அமைந்துள்ளது.
எனவே பெண்களுக்கு என்று தனி ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையத்தை தொடங்கவேண்டுமென திருநெல்வேலியைச் சேர்ந்த முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான காந்திமதி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு
இதுதொடர்பாக தனது சக பெண் ஓட்டுநர்களுடன் ஆலோசித்து, சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலியில் பெண்களுக்கான ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையத்தை தொடங்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அரசு பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையம் ஏற்படுத்திக்கொடுக்கும் பட்சத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு முன்வருவார்கள் என்று கூறுகின்றனர். மேலும் அதிக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் இத்தொழிலில் ஈடுபடும்போது சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
சமீபகாலமாக வேலை விஷயமாக வெளியே செல்லும் பெண்கள் பல்வேறு குற்றச்செயல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் செயினை பறித்துச் செல்வது, பெண்களை கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது போன்ற வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சமூகத்தில் அதிகரிக்கும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் பெண் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் மூதாட்டிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு
இதுகுறித்து தியாகராஜ நகரை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் தேவி நம்மிடம் கூறுகையில், “இந்த சமூகத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எனது கணவர் இறந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆட்டோ ஓட்டுவதால் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது மகளை கல்லூரியில் படிக்க வைக்கிறேன்.
என்னைப் போன்று பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் அவர்களால் ஓட்டுநர் உரிமம் எடுக்க முடியவில்லை. பெண்களுக்கு தனி ஓட்டுநர் பயிற்சி பள்ளி இல்லை என்பதால், அரசு பயிற்சி பள்ளி அமைத்து தரும்படி முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அதன் மூலம் ஏராளமான பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்பு கிடைப்பதுடன், பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக வெளியில் சென்றுவர முடியும்.
15 வருடங்களில் நாங்கள் 8 பேர் மட்டும்தான் ஆட்டோ ஓட்டுகிறோம். பயிற்சி பள்ளி அமைத்து கொடுத்தால் இன்னும் அதிக பெண்கள் இந்த தொழிலுக்கு வருவார்கள். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறுகின்றனர். ஆனால் திருநெல்வேலியில் ஆட்டோ துறையில் குறைந்த சதவீதமே பெண்கள் உள்ளனர்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கும்
இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் காந்திமதி நம்மிடம் கூறுகையில், “எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து விழுந்து படுத்த படுக்கையானார். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று தவித்தபோதுதான், இந்த ஆட்டோ தொழில் எனக்கு கை கொடுத்தது.
முதலில் என்னை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. உனக்கு வேறு தொழிலே கிடைக்கவில்லையா என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் எனது கணவர் எனக்கு முழு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். இதனால் எனது குழந்தைகளின் படிப்பு செலவு முதல் அனைத்திற்கும் ஆட்டோ தொழில்தான் பெரும் உதவியாக இருந்தது. யாரெல்லாம் என்னை பார்த்து சிரித்தார்களோ அவர்கள் தற்போது நீ வந்தால்தான் முடியும் என்று கூறும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளேன்.
என்னைப் போன்று மேலும் பல பெண்கள் ஆட்டோ ஓட்ட தயாராக உள்ளனர். ஆனால் அதிக பணம் செலவழித்து ஓட்டுநர் உரிமம் எடுப்பதிலும், பயிற்சி பெறுவதற்கும் சிரமம் உள்ளதால் அவர்களால் இயலவில்லை. எனவே நாங்கள் கோரிக்கை வைத்துள்ளபடி அரசு பெண்களுக்கென்று தனியாக ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையத்தை அமைத்து கொடுத்தால் நூற்றுக்கணக்கான பெண்கள் சுயதொழில் பெறுவார்கள். அரசு பயிற்சி பள்ளி அமைத்து கொடுத்தால் பயிற்சிக்காக நாங்கள் ஆட்டோ வழங்க தயாராக உள்ளோம். பெண்கள் அதிகளவில் ஆட்டோ தொழிலில் ஈடுபடும்போது சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கும்” என்றார்.
நாங்களும் ஆட்டோ ஓட்ட வருகிறோம்
இவரை தொடர்ந்து பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகந்தி கூறுகையில், “ஏழ்மை நிலையிலிருந்துதான் இந்த தொழிலுக்கு வந்தேன். என்னைப் பார்த்து பல பெண்கள் நாங்களும் உங்களைப் போன்று ஆட்டோ ஓட்ட வருகிறோம் என கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிரமம் இருக்கிறது. எனவே நாங்கள் வைத்துள்ள கோரிக்கையை அரசு நிறைவேற்றி கொடுத்தால் மேலும் பல பெண்கள் பயன்பெறுவார்கள். நான் ஆட்டோ ஓட்டுவது மட்டுமல்லாமல் பஞ்சர் ஒட்டுவது, பழுது நீக்குவது என அனைத்து வேலைகளையும் செய்வேன். ஆட்டோ தொழிலை வைத்துதான் எனது குடும்பத்தை காப்பாற்றுகிறேன்” என்றார்.
மக்கள் விரும்பும் பெண் ஆட்டோ ஓட்டுநர் இதையடுத்து ஆட்டோவில் பயனம் மேற்கொள்ள வந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில், “எத்தனை மணி நேரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை தேவி வந்தால்தான் நான் வெளியே செல்வேன். நான் எந்த வெளியூருக்கு சென்றாலும் சரி ஆட்டோ தேவைப்பட்டால் தேவியைதான் அழைப்பேன். இதுதான் எனக்கு பாதுகாப்பாக உள்ளது. எனவே பெண் ஆட்டோ ஓட்டுநர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் என்னை போன்ற மேலும் பல பெண்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் வெளியில் சென்று வர முடியும்” என்று தெரிவித்தார்.
மேற்கண்டவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். பெண்களுக்கு என்று தனி ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையத்தை தொடங்கவேண்டும் என்பதே அது. அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: எழுத்துகளால் கருணாநிதி படத்தை வரைந்த கல்லூரி மாணவர் - குவியும் அப்லாஸ்