தனியார் விடுதி நிர்வாகி மற்றும் காவல் காவல் ஆய்வாளருடன் ஈடிவி பாரத் செய்தியாளர்கள் மணிகண்டன் உரையாடல் நெல்லை:அடிக்கடி தனியார் விடுதியில் ஏசி ரூம் கேட்டு இரவில் மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தொந்தரவு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நமது ஈடிவி பாரத் செய்திகள் மேற்கொண்ட கள ஆய்வில் போக்குவரத்து காவலர் மீது தவறு ஏதுமில்லை என்பதாக தெரியவந்துள்ளது.
மாநகர காவல்துறையின் பாளையங்கோட்டை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிபவர், பேச்சிமுத்து. இவருக்கு அவ்வபோது இரவு ரோந்து அதிகாரியாகவும் பணி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில், இரவு நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து அடிக்கடி சென்று ஓசியில் ஏசி அறை கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு அறை கொடுக்காத காரணத்தால் வேண்டுமென்றே, விடுதிக்குள் நள்ளிரவில் தேவையில்லாமல் சோதனை செய்து வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்வதாகவும், சம்பந்தப்பட்ட விடுதி சார்பில் சிசிடிவி காட்சி நேற்று முன்தினம் வெளியானது. அதில், சீருடையுடன் பேச்சிமுத்தும் மற்றொருவரும் சென்று விடுதி வரவேற்பு அறை மற்றும் பிற அறைகளுக்கு சென்று சோதனை செய்வது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் போக்குவரத்து பணியை கவனிக்க வேண்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு தனியார் விடுதியை சோதனை செய்ய யார் அதிகாரம் கொடுத்தார்? என விடுதி நிர்வாகத்தினர் சமூக வலைதளம் மூலம் குற்றச்சாட்டு முன்வைத்தனர். அதிலும் வரவேற்பறையோடு நின்று விடாமல் அறைகளுக்கே சென்று சோதனை செய்யும் அளவுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அதிகாரம் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து சோதனை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்துவை ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 'சம்பவம் நடந்த அன்று நான் இரவு ரோந்து பணியில் இருந்தேன். இரவு ரோந்தின்போது, எனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விடுதிகளில் சோதனை செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான், குறிப்பிட்ட விடுதியில் சோதனை செய்ய சென்றேன். அப்போது வருகை பதிவேட்டில் சிலர் பெயர் மட்டுமே இருந்தது. அவர்களின் முகவரி குறிப்பிடப்படவில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபர் தங்கி இருந்த அறையில் சென்று விசாரணை செய்தேன்.
அப்போது அறையில் ஆட்களே இல்லாத போதும், ஆட்கள் தங்கி இருப்பதாக வருகை பதிவேட்டில் குறிப்பிட்டு இருப்பது தெரிய வந்தது. சமீபகாலமாக பெருமாள்புரம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வட மாநில கொள்ளையர்களும் அதிகரித்துள்ளனர். அந்த அடிப்படையில் தான், நான் ஆய்வுக்கு சென்றேன். மற்றபடி அவர்கள் கூறுவது போன்று, 'ஓசி'-யில் ரூம் கேட்டு யாரையும் நான் மிரட்டவில்லை. அது போன்று மிரட்டி இருந்தால் அவர்கள் நான் மிரட்டியதற்கான வீடியோவை ஏன் வெளியிடவில்லை? ஆகவே, என் மீது எந்த தவறும் இல்லை' என கூறினார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டல் விடுதி நிர்வாகத்தை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டபோது, 'ஆய்வாளர் பேச்சிமுத்து அடிக்கடி ரூம் கேட்டு மிரட்டுவார். அன்று கூட ரூம் கேட்டு ஊழியர்களை மிரட்டினார். தேவையில்லாமல் வாடிக்கையாளர்கள் இடையூறு செய்வது போன்று அறைகளுக்கு சென்று விசாரணை நடத்துகிறார். செல்போனிலும் ரூம் கேட்டு மிரட்டுவார். அவர் மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் இல்லை. அவர் மிரட்டியதாக காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக, அவர் மீது புகார் அளிக்க இருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.
பேச்சிமுத்து கூறியதைப் போன்று விடுதி நிர்வாகம் சார்பில் தற்போது வரை ரூம் கேட்டு மிரட்டுவது போன்று வீடியோ அல்லது ஆடியோ ஆதாரம் வெளியிடாமல் இருப்பது விடுதி நிர்வாகம் மீது ஒருவித சந்தேகத்தை எழுப்பிள்ளது. அதேசமயம், அதிகாரம் இருந்தாலும் திடீரென குறிப்பிட்ட விடுதியில் மட்டும் ஆய்வாளர் பேச்சி மட்டும் இரவு நேரத்தில் சென்று ஆய்வு செய்திருப்பதும் ஒருவித சந்தேகத்தை எழுப்புகிறது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து நெல்லை மாநகர உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இந்த விவகாரத்தில் ஆய்வாளர் பேச்சிமுத்து மீது எந்த தவறும் இல்லை என்றும்; இரவு ரோந்து பணியின்போது, ஓட்டல்களை சோதனை செய்ய அவருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓட்டலில் அவர் ரூம் கேட்டு மிரட்டவில்லை என்றும் ஆய்வாளர் பேச்சிமுத்துவுக்கு ஆதரவாக உயர் அதிகாரிகளுக்கு நெல்லை உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!