திருநெல்வேலி: திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் காதல் விவகாரத்தில் பெண் வீட்டாரால் ஆணவப் படுகொலை (Honour Killing in Tirunelveli) செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காதலித்து வந்ததாக கூறப்படும் பெண்ணும், கொலை செய்யப்பட்ட இளைஞரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா என்பவர், சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் இட்டமொழி ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதாலும் குறிப்பாக இளைஞர் முத்தையா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் பெண்ணின் வீட்டில், இந்த காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.
எதிர்ப்பையும் மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை கம்பெனி விடுமுறை நாளன்று(ஜூலை 23) மதியம் அப்புவிளை சுவாமிதாஸ் நகரில் உள்ள முத்தையாவின் வீட்டிற்குச் சென்று அவரை இளம்பெண் நேரில் சந்தித்துள்ளார். பின்னர், மாலையில் முத்தையா தனது இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை இட்டமொழியில் கொண்டு விட்டுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதன் பின்னர், இரவு 8 மணி அளவில் செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்ற முத்தையா, இரவு 9:30 மணி ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை.
இதனையடுத்து முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்புறங்களில் அவரைத் தேடி உள்ளனர். அப்போது காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து, வயிறு மற்றும் முதுகுபகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.