நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஆக்ஸிஜன் அதிகளவில் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் இருப்பு இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தேவையான அளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய, மத்திய, மாநில அரசுகள் சார்பில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வாய்ப்புள்ள தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கவே, துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.
முதல்கட்டமாக, அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. பாதுகாப்பாக நெல்லை சென்ற லாரியிலிருந்து, மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் ஆக்ஸிஜன் சேகரிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.