திருநெல்வேலி:சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அதே நேரத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரது உரையை புறக்கணிக்கும் வகையில், கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திருநெல்வேலி மாநகராட்சி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய மேயர் சரவணன் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அவர் பேச ஆரம்பித்த போது திமுக மாமன்ற உறுப்பினர்கள், அவரது பேச்சை புறக்கணித்து எழுந்துச் சென்றனர். அனைவரும் மேயரின் பேச்சை புறக்கணித்து எழுந்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மாநகராட்சி மேயர் சரவணன் தொடர்ந்து தனது உரையை மேற்கொண்டார். இதனால் மேயர் பேசும்போது நிகழ்ச்சி மேடை காலியாக காட்சியளித்தது.
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும், மாநகராட்சி மேயருக்கும் இடையே தொடர்ந்து நிலவும் பனிப்போர் சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்து உள்ளது. இந்த பனிப் போருக்கு பின்னணியில் ஆளுங்கட்சியான திமுகவில் நிலவி வரும் உள்கட்சி பூசல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருந்த அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம், திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான்.
தற்போதைய மேயர் சரவணன் தேர்தல் வெற்றிக்கு பிறகு, அப்துல் வகாப் தனக்கு வேண்டிய ஒரு நபரை மேயராக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது திட்டத்தை தவிடு பொடியாக்கும் வகையில், திமுக தலைமை யாரும் எதிர்பாராத வகையில் கவுன்சிலர் சரவணனை திருநெல்வேலி மேயர் வேட்பாளராக தலைமை அறிவித்தது. கட்சி தலைமை அறிவித்ததால் வேறு வழியின்றி அனைத்து திமுக கவுன்சிலர்களும் சரவணனை மேயராக தேர்ந்தெடுத்தனர்.
தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வகாப் தனக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும் என மேயருக்கு பல்வேறு கட்டளைகளை விதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சி மூலம் போடப்படும் ஒப்பந்த பணிகள் தொடங்கி, அரசு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தான் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என அப்துல் வகாப் மேயர் சரவணனுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் மேயரின் வீட்டு பத்திரத்தை பறித்துக் கொண்டு மிரட்டியதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆரம்பத்தில் அப்துல் வகாப்பின் கட்டளைக்கு இணங்கிய மேயர், பின்னாளில் தனி வழியில் செயல்பட தொடங்கினார். குறிப்பாக அப்துல் வகாப்பிற்கு எதிரணியாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய திமுக மாநில வர்த்தக இணைச் செயலாளருமான மாலை ராஜா மற்றும் திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியன் ஆகியோருடன் மேயர் சரவணன் கை கோர்த்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்துல் வகாப் தனது மாவட்ட செயலாளர் அதிகாரத்தை பயன்படுத்தி திமுக கவுன்சிலர்களை மேயருக்கு எதிராக குரல் கொடுக்க வைத்தார்.