திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரையறுக்கப்பட்ட கரோனா சிகிச்சை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 192 பேர் கரோனா உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட பணியாளர்கள் கவச உடைகள் அணிந்து தொடர்ந்து அந்த பகுதியை விட்டு வெளியில் வரமுடியாத நிலையில் 8 மணிநேரத்திற்கு மேலாக பணியாற்றும் நிலை எற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களின் வேலை பளுவை சற்று குறைக்கும் வகையில் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை பயன்படுத்த திருநெல்வேலி அரசு மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இருந்து இரண்டு தானியங்கி ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் ஒன்றின் மதிப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாகும்.
ரோபோக்களின் செயல்பாட்டை விளக்கும் விதமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.