திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சசிகுமார். அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரால் நேற்று (ஏப்.25) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பாலமுருகனின் தந்தை அழகு பாண்டியனுக்கும் சசிகுமார் குடும்பத்திற்கும் நீண்ட நாள்களாக நிலத்தகராறு மற்றும் அப்பகுதியில் உள்ள கோயிலை நிர்வகிப்பதில் முன்பகை இருந்து வந்துள்ளது.
இந்தப் பகை காரணமாக அழகு பாண்டியன் திட்டமிட்டு தனது மகன் மூலம் சசிகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அழகு பாண்டியன் நெல்லை மாநகர காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தச்சநல்லூர் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து காவல் உதவிஆய்வாளர் அழகு பாண்டியன் மற்றும் அவரது மகன் பாலமுருகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
நெல்லை விவசாயி கொலை விவகாரம் நயினார் நாகேந்திரன் உறுதி: இருப்பினும் கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சசிகுமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று(ஏப்ரல் 26) இரண்டாவது நாளாக சுப்பையாபுரம் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சசிகுமார் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கவும், இலவசமாக வீடு கட்டித் தரவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தரவும் அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி நயினார் நாகேந்திரன் சமாதானம் செய்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் விவசாயி வெட்டிக் கொலை