நெல்லை:சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் சம உரிமை வேண்டும் என்பது இன்றளவும் வெறும் பேச்சு அளவிலேயே உள்ளது. அநேகமாகப் பல விஷயங்களில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது, இங்கு மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஒரு பெண்ணின் கஷ்டம் மற்றொரு பெண்ணிற்குத் தான் தெரியும் என்பதைப் போல, ஒரு மாற்றுத்திறனாளியின் கஷ்டம் மற்றொரு மாற்றுத்திறனாளிக்குத் தான் புரியும் என்பதை இந்த சமூகத்துக்கு ஆணித்தரமாக உணர்த்தியுள்ளார், நெல்லை மாவட்ட (பயிற்சி) சார் ஆட்சியர் கோகுல் ஐ.ஏ.எஸ் (Sub Collector of Nellai District - Gokul IAS).
சாதனையாளர் கோகுல் ஐஏஎஸ்:கேரளாவைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கோகுல். இவர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, யுபிஎஸ்சி(UPSC) என்றால் கடினம் என்ற போக்கை மாற்றி, அனைவருக்கும் அனைத்தும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார். கண் பார்வையில்லாதபோதும், தனது அசாத்தியமான புத்திக்கூர்மையினால் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு, நெல்லை மாவட்ட சார் ஆட்சியராகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
விழிப்புணர்வு ஊர்வலம் எவ்வளவு நாளைக்கு?:உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்விக்க அவர்களுக்கான சம உரிமைகளை செயல் வடிவம் ஆக்கியுள்ளார் அதிகாரி கோகுல். அதன் ஒருபகுதியாக, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சொகுசு தியேட்டருக்கு 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை அழைத்துச் சென்று பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைப்படத்தைப் பார்க்க வைத்துள்ளார். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே பக்காவாக பிளான் ஒன்றும் போடப்பட்டது.
பிரத்தியேக பின்னணி ஒலியுடன் 'பொன்னியின் செல்வன்': பார்வையற்ற மாணவர்களால் காட்சிகளை கண்ணால் பார்க்க முடியாது. இதற்காக, படத்தில் கதாபாத்திரங்கள் பேசாத இடங்களில் என்ன காட்சி நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக பின்னணி ஒலி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்டுள்ளார். உடனே அதற்குச் சம்மதித்த உரிமையாளர் மாணவர்களுக்கு இலவசமாகப் படம் திரையிடுவதாகக் கூறி, அதிகாரி கோகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும், இதற்காகத் தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் படத்தில் கதாபாத்திரங்கள் பேசாமல் அமைதியாக நகரும் காட்சிகளின் பின்னணியில் என்னென்ன நடக்கிறது என்பதை ஒருவர் பேசும் பிரத்யேக ஆடியோ படத்துடன் இணைக்கும் பணிகள் ஒருவாரமாக நடந்தது.
சர்ப்ரைஸில் மாணவர்கள்:பின்னர் திட்டமிட்டபடி நேற்று (டிச.3) மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர், அவர்களின் ஆசிரியர்கள் உதவியோடு சொகுசு திரையரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். சார் ஆட்சியர் கோகுலும் அங்கு வந்தார். பின்னர், மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி ஸ்கீரினில் சிறப்புக் காட்சியாக 'பொன்னியின் செல்வன்' படம் திரையிடப்பட்டது. ஏற்கனவே, திட்டமிட்டபடியே பின்னணி ஒலியும் இடம் பெற்றிருந்தது திரையரங்கிலிருந்த மாணவர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. தொடர்ந்து, சொகுசு இருக்கையில் அமர்ந்து படத்தை ரசித்த மாணவர்கள் ஆனந்தமாக கைகளைத் தட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
கனவிலும் நினைக்கவில்லை: முன்னதாக இதுகுறித்து பேசிய சார் ஆட்சியர் கோகுல், 'மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து மூன்று மணி நேரம் படம் ஓடி முடிந்த பிறகு மாணவர்கள் மகிழ்ச்சியோடு வெளியே வந்தனர். குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும் தங்களை இப்படி சொகுசு திரையரங்கிற்கு அழைத்து வருவார்கள் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முக பாவனையில் பார்க்க முடிந்தது. குறிப்பாக வாய்பேச முடியாத மாணவர்கள் கை அசைவு பாஷை மூலம் படத்தில் காட்சிகள் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர்' எனத் தெரிவித்தார்.