திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளைக் கொண்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த சரவணன் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு திருநெல்வேலி மாநகராட்சியின் 16வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு பெற்றார்.
பின்னர், திமுக தலைமை இவரை மேயராக அறிவித்தது. அதன் பெயரில் ஒன்றரை ஆண்டுகளாக திருநெல்வேலி மாநகராட்சி மேயராக சரவணன் செயல்பட்டு வருகிறார். அதேசமயம், அப்போதைய திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் சரவணனை சாதாரண கவுன்சிலராக மட்டுமே திட்டமிட்டு இருந்தார். தனக்கு மிகவும் வேண்டப்பட்ட மற்றொரு நபரை மேயராக்க வேண்டும் என்று அப்துல் வஹாப் எண்ணியிருந்தார்.
ஆனால் கட்சி தலைமை திடீரென சரவணனை மேயராக்கியதால் அப்துல் வஹாப் அதிர்ச்சி அடைந்தார். பின் வேறு வழி இல்லாமல் சரவணனை ஏற்றுக் கொண்ட அப்துல் வஹாப் தனக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்வது மற்றும் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை முடிவு செய்வது உட்பட அனைத்தையும் தன்னை கேட்டு தான் முடிவெடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாகவும், பரபரப்பாக பேசப்பட்டது.
ஒரு கட்டத்தில் அப்துல் வஹாப் பேச்சைக் கேட்டு மேயர் நடக்க மறுத்தார். தனிவழியில் பயணிக்க தொடங்கினார். இதனால் அப்துல் வஹாப், அவர் மீது கடும் கோபம் அடைந்தார். மேலும், அப்துல் வஹாப் நெருக்கடியில் இருந்து தப்பிக்க மேயர் அப்துல் வஹாப்பின் எதிர் அணியான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா பக்கம் சென்றார்.
நெல்லை மத்திய மாவட்ட திமுகவை பொறுத்தவரை மாலைராஜா, மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் ஆகியோர் ஒரு அணியாகவும், அப்துல் வஹாப் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, எதிர் அணிக்கு சென்றதால் கடும் கோபம் அடைந்த அப்துல் வஹாப் தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தார்.
குறிப்பாக, மேயர் சரவணன் மாநகராட்சி திட்ட பணிகளில் ஊழல் செய்வதாக திமுக கவுன்சிலர்களே பகிரங்கமாக மன்ற கூட்டங்களில் குற்றம் சாட்டினர். மேயரைக் கண்டித்து தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் தர்ணா போராட்டங்களும் நடைபெற்றன. திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் நெல்லைக்கு வந்திருந்த போது மேயர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை வரவேற்கவிடாமல் அப்துல் வஹாப் தரப்பினர் துரைமுருகன் முன்னிலையிலையே மோதிக்கொண்டனர். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த துரைமுருகன் சென்னை சென்ற ஓரிரு நாளில் அப்துல் வஹாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார்.