திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
முழுக் கொள்ளளவை எட்டிய அணை
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவத்தில் போதிய மழை பெய்யாததால், அணைகள் நிரம்பவில்லை. அதேசமயம் வடகிழக்குப் பருவத்தில் திருநெல்வேலி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த மாதம் அதிக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியது.
பின்னர் 'புரெவி புயல்' காரணமாக பெய்த மழையால் நீர்மட்டம் மேலும் உயர்ந்துவந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை பெய்துவருகிறது. இதனால் இன்று பாபநாசம் அணை தனது முழுக் கொள்ளளவான 143 அடியை எட்டியது.
அணைக்கு தண்ணீர் வரத்து
தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு வினாடிக்கு இரண்டாயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில், அணை நிரம்பியுள்ளதால் தற்போது அணை மதகுகள் வழியாக மூன்றாயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல், மே போன்ற கோடை காலங்களில் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க முடியும். கோடை கால பயிர் விவசாயத்திற்கும் அணையில் நீர் நிரம்பி இருப்பதால் தேவையான அளவு நீரை வழங்க முடியும். இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அணை மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் வரை நேரடியாகவும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. அதற்கு ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை நிரம்பியிருப்பது தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நெல்லை தொடர் மழையில் முழுக் கொள்ளளவை எட்டிய பாபநாசம் அணை!