வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்துவருவதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபாநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 145.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 584 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நீர் வெளியேற்றம் மழையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம், ஒரேநாளில் 3 அடி உயர்ந்து 158.78 அடியாக உள்ளது.