தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சிறை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், அவர்களது இறப்பிற்கு காரணமான இரண்டு காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் இரண்டாவது நாளாக உடற்கூறாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.