பாளையங்கோட்டை(நெல்லை): நெல்லை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து ஏலம் விடுமாறு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, மேலப்பாளையம் உள்ளிட்டப் பகுதி சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏலத்தின்போது குறுக்கிட்ட சூர்யா என்பவர், மாடுகளை கட்டவிழ்த்து விடக்கோரி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டு, பாளையங்கோட்டை தண்ணீர் தொட்டி பகுதியில் மாடுகளை மாநகராட்சியினர் அடைத்து வைத்தனர்.
மாநகராட்சியினர் அடைத்து வைத்த மாடுகளை, பாஜக நிர்வாகி தயாசங்கர் என்பவரின் தலைமையில் சிலர் கட்டவிழ்த்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தடுக்க வந்த மாநகராட்சி ஊழியர்களையும் தயாசங்கர் தலைமையிலான கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் அளித்தப்புகாரில் தயாசங்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், 3 பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.