தலைமை ஆசிரியரை ஆக்ரோஷமாகக் கடித்த ஆசிரியை ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு திருநெல்வேலி: நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இவர் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை மிகவும் அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், தான் திட்டியதை புகார் தெரிவித்தால் உங்களது பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவர்கள் தனது பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோர், இது குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்று அடிக்கடி புகார் வருவதால், இது தொடர்பாக தனக்கு விளக்கம் அளிக்கும்படி கடிதம் ஒன்றை ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் தலைமை ஆசிரியர் ரத்தின ஜெயந்தி கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி, கடிதத்தைக் கிழித்து எரிந்துவிட்டு தலைமை ஆசிரியரை ஆபாசமாகத் திட்டியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியின் கழுத்திலிருந்த 5பவுன் தங்கச் சங்கிலியை பறித்து வைத்துக்கொண்டு தலைமை ஆசிரியரைத் தாக்கி, அவரது கையை கடித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், பள்ளிக்கு நாங்குநேரி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி தலைமை ஆசிரியரின் தங்கச் சங்கிலியைத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், ஸ்டெல்லா ஜெயசெல்வி தராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி டிஎஸ்பி ராஜ் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியையிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தார். இதனிடையே, இரு ஆசிரியர்களும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்பு சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், ஏர்வாடி போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரு லட்டு ஒரு கோடிப்பே! விநாயகர் விசர்ஜனம் வெகு சிறப்பு - ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!