திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவனத் தலைவர் சிவகாமி பேசுகையில், “தென் மாவட்டங்களில் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சந்துரு எங்களிடம் கேட்ட அறிக்கையின் அடிப்படையில், நாங்கள் நேரில் வந்து கள ஆய்வு மேற்கொண்டு சந்துரு-க்கு விரைவில் அறிக்கை வழங்க இருக்கிறோம். நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நெல்லை மாவட்டத்தில் அதிக சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக கரிசல்குளம் பகுதியில், சாந்தி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், ராதாபுரம் பகுதியில் இசக்கி முத்து என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், மணி மூர்த்தீஸ்வரம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, நிம்மதியாக உறங்கவில்லை என கூறுகிறார்கள். தமிழக அரசின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனைக்கு பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணம் பெறப்பட்டு உள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால், சிறப்பு திட்டத்தின் கீழ் இலவச வீடு வழங்கியிருக்கலாம்.