திருநெல்வேலி: தமிழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, திருநெல்வேலி போன்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட நூறு பேருந்துகளின் சேவையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 11ம் தேதி சென்னையில் வைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நூறு பேருந்துகளும் திருநெல்வேலி கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற போக்குவரத்துக் கழகங்களுக்கு தனித்தனியே தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 30 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. வழக்கமாக இதுவரை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீலம் பச்சை ஆகிய நிறங்களில் வண்ணம் பூசப்பட்டிருக்கும் ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளில் முழுக்க முழுக்க மஞ்சள் நிற வர்ணம் அடிக்கப்பட்டு இருந்தது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடித்த நிறம். குறிப்பாக அவர் கடைசி வரை தோளில் மஞ்சள் துண்டு அணிந்திருந்தார் எனவே கருணாநிதி நினைவாகவே அரசு பேருந்துகளில் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளதாக ஒரு வகையான கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் பல இடங்களில் பழுதாகி நடுவழியில் நிற்கும் சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துகள்: அதாவது புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் 100 பேருந்துகளும் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்து வந்த பேருந்துகளாகும். அவற்றில் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளைப் புதுப்பித்திருப்பதாக அரசு கூறியது ஆனால் பெரும்பாலும் காலாவதியான பேருந்துகளே புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் விடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. மஞ்சள் நிறத்தில் பளபளவென காட்சி அளிப்பதை வைத்தும் இருக்கைகள் கைப்பிடிகள் படிக்கட்டுகள் என அனைத்தும் புதுசாக இருப்பதால் மக்கள் இதை புதிய பேருந்து என்றே நினைத்தனர்.
ஆனால் இந்த வண்டியில் இன்ஜின் மற்றும் தொழில்நுட்ப உதிரிப் பாகங்கள் அனைத்தும் மிகப் பழையது என்பதும் வண்டியின் பாடி மற்றும் இருக்கைகள் மட்டுமே புதியது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். வண்டியின் முன்புறம் பளிச்சிடும் மின் பலகையிலான வழித்தடம் இரவில் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பேருந்து என்ற மகிழ்ச்சியோடு அதில் பயணித்த பயணிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
குறிப்பாகத் திருநெல்வேலியில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் நடுவழியில் பழுதாகி விட்டன. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் தச்சநல்லூரில் இருந்து புதிய பேருந்து நிலையத்தை நோக்கி வந்த பேருந்து வடக்கு பைபாஸ் சாலையில் பழுதானதால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 22) திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு 129 வழித்தட எண் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பேருந்து நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் பேருந்து நிறுத்தம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. இதையடுத்து அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.