திருநெல்வேலி:டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் இயங்கிவரும் சாஃப்டர் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கட்டட விபத்தில் சிக்கி அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றுவந்த நெல்லை நரசிங்கநல்லூர் சத்யா நகரைச் சேர்ந்த அன்பழகன், எட்டாம் வகுப்பு படித்து வந்த தச்சநல்லூர் கீழ இலந்தைகுளம் வெள்ளகோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வ ரஞ்சன், ஆறாம் வகுப்பு படித்துவந்த பழவூர் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில்...
மேலும் நான்கு மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் இடிந்து விழுந்த சுவர் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கழிவறைக்குச் சென்ற மாணவர்கள் ஏழு பேரும் அந்தச் சுவரின் மீது கைவைத்து விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது.