திருநெல்வேலி: அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பூவலிங்கம் என்பவரது மகன்கள் பூதத்தான், சிவசண்முகம் இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்தாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதன்படி பூதத்தான் தேர்ச்சி பெற்றார்.
இருப்பினும், பூதத்தான் சரிவர ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவில்லை, பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் மீண்டும் 10ஆம் வகுப்பே படிக்க வற்புறுத்தியுள்ளது. இதனால் பெற்றோர் மாற்று சான்றிதழ் கேட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் கால தாமதம் செய்துவந்துள்ளது.
அதோடு பள்ளி நிர்வாகம் பூதத்தானின் தம்பி சிவசண்முகத்தையும் படிக்கவிடாமல் செய்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், பூவலிங்கம், குடும்பத்துடன் 4 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தார். மாணவர்கள் இருவரும் கல்லிடைக்குறிச்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மேலேறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், இன்று(ஜூன் 25) அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தின் மேலேறிய இரண்டு மாணவர்களும் மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் கீழே அழைத்து வந்தனர்.
இதையும் படிங்க:தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத கைக்குழந்தை கடத்தல் - மூவர் கைது