திருநெல்வேலி:கூகுள் மென்பொருள் வல்லுநர் கூட்டமைப்பு நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் நெல்லை மண்டலம் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(நவ.17) நடைபெற்றது . தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பாக நடைபெறும் இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
இதில் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர் போட்டியை துவக்கி வைத்து ஆட்சியர் விஷ்ணு பேசும்போது , “நெல்லை மாவட்டத்தில் இரவு பலத்த மழை பெய்தது. எனவே பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விட வேண்டுமா.., வேண்டாமா.. என அறிவிப்பதில் கஷ்டமான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு பலத்த மழை பெய்தது காலை 6 மணிக்கு வாட்ஸ் அப்பில் தாலுகா வாரியாக மழை குறித்து ஆய்வு செய்ததன் மூலம் முடிவெடுப்பதில் மிகவும் கஷ்டமான சூழல் இருந்தது.
உடனே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக மழை இருக்கிறதா..?, என்று விசாரித்தேன். அங்கு மழை இல்லை எனவே விடுமுறை இல்லை என முடிவெடுத்து விட்டேன். அதற்குள் டுவிட்டரில் டேக் செய்து ஐயா இன்று விடுமுறை விடுங்கள் என்று கேட்கத் தொடங்கி விட்டனர். இப்படிப்பட்ட ஒரு குளிர்ச்சியான நாளில் நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்” என்று கலகலப்பாக பேசினார்