நெல்லை:உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களில் விமானம் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில், வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிக்களுக்காக அங்கு வசித்து வருகின்றனர். தற்போது அவர்களுடைய நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர் .
பல்வேறு நகர்பகுதியில் குண்டுகள், ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் அங்குள்ள மாணவர்கள் அச்சம் அடைந்ததுள்ளனர். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தைத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலை குறித்து பேசிவருவதுடன் தாங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும் உருக்கமுடன் தெரிவித்துவருகின்றனர்.