திருநெல்வேலி:வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது நான்கு குழந்தைகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பனகுடி காவல் நிலையத்தில் எழுத்தர் ஆக பணிபுரிந்த கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்ணன் மனைவி காவல்துறையில் அளித்த புகாரி பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, கண்ணன்-இசக்கியம்மாள் ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இசக்கியம்மாள் வடக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் அரேபிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தெரிகிறது.
அந்த வகையில், ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் அவரிடம் முறையிட்டு வந்த நிலையில், இசக்கியம்மாள் அடிக்கடி வீட்டை காலி செய்து வெவ்வேறு பகுதிகளில் குடியிருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் இசக்கியம்மாளின் மகன் ஸ்டாலின் என்பவர் தனது தாயின் மோசடி நடவடிக்கையை பிடிக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு அப்பாவி பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம் என இசக்கியம்மாளிடம் அவரது மகன் ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தியுள்ளார். அதற்கு 'உனக்கு ஒன்றும் தெரியாது நீ சும்மா இரு' என்று அவரது தாயார் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனது தாயின் மோசடி செயலைக் கண்டு மனம் வெதும்பிய ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.